பால் மரமா பாத்து கட்டின பால் அதிகம் கறக்குமா???????


அன்று அதிகாலை நேரம். நான் வயல்வெளி பக்கம் சென்றேன். இயற்கையின் அழகை ரசித்த என் கண்கள், மரத்தில் காய் கனிகள் தொங்குவதற்கு பதில் நெகிழி பைகள் ஊஞ்சல் ஆடுவது கண்டு வியந்தது. அது என்னவென்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் என் கால்கள் அந்த மரத்தை நோக்கி சென்றது. இயற்கையான அந்த சூழலில் பூக்களின் வாசத்திற்கு நடுவே துர்நாற்றம் வீசியது, மேலும் என் ஆர்வம் அதிகரித்தது....

அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “இவை மாடு கன்று ஈன்ற பின் போடும் உறுப்பு” என்றார்கள்

அதற்கு நான்,“இதை ஏன் மரத்தில் கட்டி இருக்கீங்க?” என்றேன்.

அவர்களோ, “மாடு போடும் உறுப்பை பால் மரமாக பார்த்து கட்டினால் பால் அதிகம் கறக்கும்.இது நாங்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறோம்” என்றனர்.

அவர்களின் அறியாமை கண்டு நான் சிரிக்கவில்லை; சிந்தித்தேன். மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பேச தொடங்கினேன்..... “மாடு கன்று ஈன்ற பின் போடும் உறுப்பை பால் மரத்தில் கட்டினால், அது சில நாட்களுக்கு பிறகு அழுகி துர்நாற்றம் வீசும். அவ்வழியே செல்லும் மக்களுக்கு இடையூராக இருக்கும். மேலும், அந்த துர்நாற்றம் நாய்களின் கவனத்தை ஈர்க்கும். பின், நாய்கள் உறுப்பை தெருவில் கடித்து இழுத்துச் செல்லும். இதனால் மனிதர்களுக்கம் கால்நடைகளுக்கம் நோய் பரவும் வாய்ப்புகள் உண்டு. நாய்கள் உறுப்பை கடித்து இழுக்கும் போது, அங்கு உள்ள நெகிழி பைகளை கால்நடைகள் உண்ண நேரிடும்” என்றேன்.

மழைக்கு மரத்தடியில் ஒதுங்குவது கூட சிரமமாகிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் நிழலுக்காக மரத்தடியில் நிற்பதற்கும் சிரமமாகிறது.  

நான் கூறியதை கேட்ட சிலர் ஆச்சிரியத்தில் மூழ்கினர்; சிலர் நான் ஏதோ உளறுகிறேன் என்று அந்த இடத்தை விட்டு சென்றனர். சிலரோ, “நாங்கள் இவ்வளவு நாளாக எங்கள் அறியாமையால் தவறு செய்து இருக்கிறோம். அது எங்களுக்கும் நாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிதும் எண்ணவில்லை. இதற்கு என்ன வழி இருக்கிறது?” என்றனர்.

இவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததே மாற்றத்திற்கான பாதி வெற்றி என்று நினைத்தேன். “ உங்கள் பிரச்சனைக்கு நான் தீர்வு காண வழி சொல்கிறேன், கவலை வேண்டாம். முதலில், கன்று ஈன்ற பின் மாடு போடும் உறுப்பை ஆழமாக குழி தோண்டி புதைப்பது நல்லது. அந்த குழியில், மாடு உறுப்பை போட்டு அதன் மீது மஞ்சள் உப்பு கரைசல் தெளிக்க வேண்டும். பின் அந்த குழியை மூட வேண்டும். இப்படி செய்வதால், மனிதர்களுக்கும் மற்ற கால்நடைகளுக்கும் எந்த நோய் பரவும் வாய்ப்பும் இருக்காது.

இரண்டாவது, இங்கே மரத்தில், மாடு போடும் உறுப்பை கட்டிவிட்டு, வீட்டில் மாட்டின் பால் உற்பத்தியை எதிர்பார்க்கும் நீங்கள், மாட்டிற்கு சமச்சீர் உணவு கொடுப்பதின் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று ஏன் எண்ணக் கூடாது?. சமச்சீர் உணவு என்பது, அடர்தீவனம் (கோதுமை தவீடு, அரிசி தவீடு, புண்ணாக்கு, உளுத்தம் பொட்டு, தானியங்கள்), பசுந்தீவனம் (புல் வகைகள்), உளர்தீவனம் (வைக்கோல்) போன்றவை. இதனோடு, தாது உப்பும் கலந்து கொடுக்கலாம். சமச்சீர் உணவு கொடுப்பதின் மூலம் மாட்டிற்கு அனைத்து விதமான சக்தியும் கிடைக்கும். அதனால் பால் உற்பத்தியும் அதிகரிக்கும்” என்றேன்.

நான் கூறியதை கேட்ட மக்கள், “ நாங்கள் செய்த தவறை எங்களுக்கு உணர்த்தி, அதற்கு வழியும் கூறியுள்ளீர்கள். நாங்கள் இனி மாடு போடும் உறுப்பை மரத்தில் கட்ட மாட்டோம். மாடுகளுக்கு சமச்சீர் உணவும் கொடுப்போம். உங்களின் ஆலோசனைக்கு நன்றி” கூறி விடைபெற்றனர்.

இயற்கையை ரசிக்க சென்ற நான், மக்களை மாற்றத்தை ஏற்படுத்தும் பாதையில் அழைத்துச் செல்ல முயற்சியில் இறங்கிவிட்டேன். நான் கூறியதை எத்தனை பேர் புரிந்து செயல்படுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. “ மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்தை நோக்கி நாம் பயணிப்போம்”.... 

*உறுப்பு என்று இங்கு கூறப்பட்டுள்ளது நஞ்சுக்கொடி/ சத்தை/ கருப்பை என்று வெவ்வேறு சொற்களால் அழைக்கப்படுகிறது.

 

மகேஷ்வரி.சு

III. B.V.Sc& A.H

இளநிலை கால்நடை மருத்துவ பட்ட படிப்பு மாணவி

&

முனைவர். சா. தமிழ்க்குமரன்

(கால்நடை நண்பன் JTK)

கால்நடை மருத்துவர் / பண்ணை ஆலோசகர்

புதுச்சேரி.


Share:

No comments:

Post a Comment

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts