A1 & A2 பால் - உண்மை என்ன????


நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு அளிக்க கூடிய உணவு பொருட்களில் ஒன்று, பால். உலக அளவில் இன்று இந்திய பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீது சர்ச்சை எழுப்பி மக்களை குழப்பத்திற்கு ஆளாக்குவது வழக்கமான ஒன்று. அப்படி வழக்கத்தில் உள்ள தலைப்பு தான் இந்த  A1 மற்றும் A2 பால். A1 பால் கலப்பின மாட்டு பால், அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும், A2 பால் நாட்டு மாட்டு பால், அது பல நன்மை தரக்கூடியது என்றும் கூறப்படுகிறது.  A1 மற்றும் A2 பால் என்பது என்ன? A1 பால் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று கூறுவதற்கு காரணம் என்ன? இதை குறித்து சிறிய விளக்கத்தை காண்போம்.

எப்பொழுது எழுந்தது A1 மற்றும் A2 பால் பற்றிய கேள்வி?

1980-ல்  மருத்துவ ஆராய்ச்சிகள், செரிமானத்தின் போது பெறக்கூடிய பெப்டைடால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியில் கேசின் புரதமும் உள்ளடங்கியது. பின்பு இதன் விளைவாக, 1990களில் நியூசிலாந்தில், கேசின் புரதம் பற்றி ஆராய்ச்சி நடந்தது. அங்கு அவர்கள், பீட்டா  கேசின் புரதத்தில் ஏற்பட்ட மாற்றம், மற்றத்திற்கும் மக்களிடம் ஏற்படும் சுகாதார விளைவுகளுக்கும் தொடர்பு உள்ளது என்று எண்ணினார்கள். அவ்வாறு இந்த A1,A2 பால் பற்றிய சந்தேகம் மக்களிடையே பரவ தொடங்கியது.

A1, A2 பால் என்பது என்ன?

பாலில், 87 சதவீதம் தண்ணீர் மற்றும் 13 சதவீதம் புரதம் ,சர்க்கரை ,கொழுப்பு ,உயிர் சத்து, தாது உப்பு போன்ற திட பொருட்கள் உள்ளன. பாலில் உள்ள புரதங்களில் முக்கியமானது கேசின் என்னும் புரதம். அவற்றுள் 30-35% பீட்டா கேசின் பங்கு அளிக்கிறது. பீட்டா கேசினில்,  209 அமினோ அமிலங்கள் உள்ளன. மரபணு பிழைவு (Mutation) காரணமாக அமினோ அமிலங்களின் 67 ஆவது இடத்தில் புரோலின் எனும் அமினோ அமிலத்திற்கு  பதில் ஹிஸ்டிடின் எனும் அமினோ அமிலம் உருவானது.

ஒரு புரதத்தின் இரு மாறுபட்ட வடிவங்கள் இந்த A1 மற்றும் A2 பால். கலப்பின மாடு A1 பாலையும், நாட்டு மாடு A2 பாலையும் கொடுக்கிறது. A1 பாலை அருந்திய பின் பீட்டா கேசின், செரிமானத்தின் போது என்சைம்களால் (Enzymes) உடைக்கப்பட்டு BCM 7(Beta caso Morphin7) எனும் பெப்டைட் வெளிப்படுகிறது.

இந்த BCM-7, A2 பாலை அருந்தும்போது வெளிப்படுவது கிடையாது. BCM 7 செரிமானத்திற்கு பின் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உடலில் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. BCM 7 பெப்டைட் வெளிப்படுவதால், நீரிழிவு நோய், இருதய நோய், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற நோய் வருவதாக கூறப்படுகிறது. இப்படி சில ஆராய்ச்சிகள் கூறும் நிலையில், EFSA (European Food Safety Authority) நடத்திய ஆராய்ச்சியில், A1 பாலை அருந்தியபின் வெளிப்படும் BCM 7 பெப்டைடுக்கும் மக்களுக்கு ஏற்படும் நோய்க்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறது.

 வெண்மை புரட்சிக்கு முன்பு நம் நாடு அயல்நாடுகளிடம் பாலை இறக்குமதி செய்தது. ஏழை குழந்தைகளுக்கும், மக்களுக்கும் எட்டாக் கனியாய் பால் இருந்தது. பாலில் உள்ள புரதம் மற்றும் இதர சத்துக்கள் கிடைக்காமல் குழந்தைகள் சத்துக் குறைபாட்டால், பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். 1970-ல் முனைவர் வர்கீஸ் குரியன் வெண்மைப் புரட்சியை இந்தியாவில் தொடங்கினார். அவரே வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். அதன் மூலமே கலப்பின பசுக்கள் மற்றும் செயற்கை முறையில் கருவூட்டல் கொண்டுவரப்பட்டது.

இதன் விளைவாக இன்று நம் நாடு உலகத்திலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக திகழ்கிறது. ஏழை எளியோர்களுக்கும் பாலை அருந்தும் வாய்ப்பு கிட்டியது. குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து தப்ப வாய்ப்பும் கிட்டியது. ஆண்டுக்கு ஒரு கன்று என்பதும் சாத்தியமானது. இன்று தனி நபர் ஒருவருக்கு கிடைக்கும் பாலின் அளவு 374 கிராமாக உயர்ந்துள்ளது. மரபணு பிழைவு (Mutation) காரணமாக  ஏற்பட்ட இந்த  A1 பால் தீங்கு விளைவிப்பதாக ஒருபுறமிருந்தாலும், நம் உணவு பழக்கவழக்கங்கள் மாறிக்கொண்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. A1 பாலை அருந்துபவர்கள் எல்லோருக்கும் நோய் வருவதும் இல்லை; A2 பாலை அருந்துபவர்கள் அனைவரும் நோயால் அவதி படாமல் இருப்பதும் இல்லை. எந்த ஒரு ஆராய்ச்சியும் A1 பால் தீங்கு விளைவிக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிருபிக்கவில்லை.

சமீபத்தில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை இந்தியாவில் உள்ள அனைத்து கலப்பின பசுக்களும் A1 மற்றும் A2 பால் இரண்டையும் உள்ளடக்கிய மாடுகள் என்றும் இந்திய நாட்டின பசு மற்றும் நாட்டு மாடுகள் A2 பால் கொடுப்பதென்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்றும் பெருமளவு பால் உற்பத்தி இந்த கலப்பின பசுக்களிடம் இருந்து தான் வருகிறது. அப்படியென்றால் இந்த பசுக்களில் இருந்து கிடைக்கும் பால் A1 & A2 இரண்டையும் உள்ளடக்கியுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகாலமாக அதை தான் நாம் அனைவரும் பருகி வருகிறோம். நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை அது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவும் இல்லை. 

ஏன் நியூசிலாந்தில் உள்ள A2 நிறுவனத்தில் HF இன மாடுகளில் இருந்து A2 பால் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா??? . இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தைப் பாருங்கள் அனைத்தும் HF மாடுகளே, ஆனால் இவை காதுகளில் உள்ள தோடுகள் அவை A2 பால் தருகிறது என்பதை காட்டுகிறது . இது ஒன்றே போதும். A2 பால் வியாபார நோக்கத்திற்காக தான் ஆரம்பிக்கப்பட்டதென்று.

தேவைகள் இருந்தால் தேடல்கள் இருக்கும்; தேடல்கள் இருக்கும் இடத்தில் புரிதல் இருக்கும். நம் வாழ்க்கைக்காக தேடுவோம், புரிந்துகொள்வோம்.

இந்த உலகில் பிறக்கும் எந்த ஒரு ஜீவராசியும் தன் தாயிடம் வளரும் வரை மட்டுமே பால் அருந்தும், ஆனால் மனிதன் ஒருவன் தான் பிறந்த பின்பும் பால் குடிக்கிறான்; இறந்த பின்னுப்பும் பால் குடிக்கிறான்; இடைப்பட்ட வாழ்நாள் முழுவதும் பால் குடிக்கிறான்.   

நமக்கு நோய் வருவதற்கு, நம் அன்றாட வாழ்வியல் முறை, உணவுமுறை, வேலை சுமை, போன்ற பல காரணங்களைக் கூறலாம். இவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு பாலின் மீது மட்டும் குறை கூறுவது நியாயமா? இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர!!! இதுவே காரணம் அல்ல!!!! சிந்தியுங்கள்!!!! செயல்படுங்கள்!!!!

மகேஷ்வரி.சு

III. B.V.Sc& A.H

இளநிலை கால்நடை மருத்துவ பட்ட படிப்பு மாணவி

&

முனைவர். சா. தமிழ்க்குமரன்

(கால்நடை நண்பன் JTK)

கால்நடை மருத்துவர் / பண்ணை ஆலோசகர்

புதுச்சேரி.


Share:

1 comment:

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts