Showing posts with label preventive measures in livestock. Show all posts
Showing posts with label preventive measures in livestock. Show all posts

“கொரோனா உலகடங்கு - பாதிப்பு இருமடங்கு - வீட்டோடு நீயடங்கு” இந்த இக்கட்டான சூழ்நிலையில் கால்நடை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகள் மற்றும் தகவல்கள்


கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தின் காரணமாக ஊரடங்கு, உலகே அடங்கிக் கிடக்கும் வகையில் ஸ்தம்பித்துப் போயிருப்பது மக்களுக்கு பெருமளவு பாதிப்பையும் மன உளைச்சலையும் தந்திருக்கிறது. இது பெருமளவு கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கால்நடைகளை எப்படி பராமரிப்பது என்பது மிக அவசியமாகிறது. அதற்கு வேண்டிய முக்கியமான வழிமுறைகளையும் தகவல்களையும் தெரிந்துகொள்வது நல்லது

 முக்கிய இடர்பாடுகள்

1.        மேய்ச்சலுக்கு கால்நடைகளை கொண்டு செல்வதில் சிக்கல்

2.        தீவன தட்டுப்பாடு / அடர் தீவன விலை உயர்வு

3.        மருத்துவத்திற்கு கால்நடைகளை எடுத்துச் செல்வதில் சிக்கல்  

4.        பாலை விற்பனை செய்வதில் சிரமம்

5.        கைவிடப்பட்ட பிராணிகளின் நலம்

6.        கொல்லைப்புற கோழி வளர்ப்பில் சிக்கல்

இது போன்ற பல்வேறு சிரமம்களை கால்நடை விவசாயிகள் சந்திக்க நேரிடுகிறது

 சமூக விலகல் /சமூக இடைவெளி ஒன்றே இந்த இக்கட்டான சூழ் நிலையிலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றும் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் கால்நடைகள் மேய்ச்சல் நிலங்களை நம்பியே உள்ளன. இயல்பாக கிராமப்புறங்களில் கால்நடை விவசாயிகள் ஒன்றுகூடி கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்த சூழ்நிலையில் நாம் அதை தவிர்ப்பது நன்மை பயக்கும், மேய்ச்சலுக்கு செல்லும் போது போதுமான இடைவெளி விட்டு மாடுகளை மேய்ப்பது நல்லது அதேபோல் கிராமத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் மாடுகளை மேய்ப்பது தவறு. தினமும் மாடுகளை மேய்ப்பதற்கு வீட்டின் வெளியே வருவதையும் தவிர்த்துவிடுவது நல்லது. சுழற்சி முறையில் ஒவ்வொரு விவசாயிகளும் தனித்தனியாக தங்கள் வீட்டின் அருகில் கால்நடைகளை மேய்க்கலாம். இயல்பாக மேய்ச்சல் நிலங்களில் ஒன்றாக அமர்ந்து பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தனித்தனியே கால்நடைகளை மேய்ப்பது சிறந்தது.

 தீவன தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்த காலத்தில் தினசரி நாட்டுக் கம்பு - 100 கிராம் அளவிற்கு முளைகட்டி கொடுத்துவந்தால் மாடுகளுக்கு தேவையான அனைத்து விதமான நுண் சத்துக்களும் கிடைக்க அது வாய்ப்பாக அமையும். இதுபோன்ற நேரங்களில் அனைத்து வகையான அடர் தீவனங்களும் கிடைப்பது அரிதாக இருக்கின்றது, அதனால் ஒருவகை தவிடு, உமி, பொட்டு அல்லது  புண்ணாக்கு அதிக அளவில் கொடுத்து வருவது தவறில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் தானியங்களை உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் ஆனால் ஒவ்வொரு முறையும் தானியங்களை கொடுக்கும்போது அவற்றை குருணை வடிவில் அரைத்து அளிக்கவேண்டும். அரிசி, கோதுமை போன்றவற்றை அதிகளவில் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக பட்சம் ஒரு கிலோ வரை கொடுக்கலாம். எந்த ஒரு தானியத்தையும் காய்ச்சி கூழாக்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தானியங்களை கொடுக்கும் போதும் அவற்றை ஊறவைத்து கொடுப்பது செரிமான தன்மையை அதிகரிக்கும். கால்நடைகளுக்கு தேவையான அனைத்து தீவன பொருட்கள் வாங்க எந்த தடையும் இல்லை. ஆனால் இந்த சமயத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு தீவனங்களை விற்பதால் ஏழை விவசாயிகளால் அதை வாங்க முடிவதில்லை. 

 பசுந்தீவன தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த காலகட்டத்தில் எளிய முறையில் 7 நாட்களில் அனைவரும் தங்கள் வீட்டிலேயே மண் இல்லா தீவன முறைப்படி பசுந்தீவனம் தயாரிக்கலாம். இதற்கு சோளம் சிறந்த தானியமாகும். நம் கிராம விசேஷங்களுக்கு முளைகட்டி நாத்து எடுப்பதுபோல (பாரி முளைத்தால் என்றும் சொல்லப்படுகிறது) இதையும் வீட்டிலேயே நாம் செய்து கால்நடைகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும்.

 கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படாத இந்தநிலையில் இணையதளம் மூலமாகவும் இலவச உதவி எண்கள் மூலமாகவும் நமக்கு தேவையான தகல்வல்களையும் முதல் உதவிகளையும் பெற முடியும். இதற்கு அரசாங்க உதவி எண் 1551 அல்லது RFIS Toll Free 18004198800 எண்ணை தொடர்பு கொள்ளலாம். கால்நடை மருத்துவமனைகள் முழுநேரமும் இயங்கி கொண்டிருக்கிறது. அவசர சேவைகளுக்கு உங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம். சில மாவட்டங்களில் நடமாடும் கால்நடை சேவையும் இயங்குகிறது அதற்கு 1962 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். செல்ல பிராணிகள் வளர்ப்போர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி https://airtable.com/shrWXmkFcM5iBjeUg வாயிலாக மாவட்டம் வாரியாக செல்லப்பிராணிகளுக்கான கால்நடை மருத்துவர்களை தெரிந்து கொள்ளலாம்

 பாலை தானாக விற்பனை செய்பவர்கள் அரசாங்க அனுமதித்தால் e-pass பெற்றுக்கொள்ளலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். https://serviceonline.gov.in/tamilnadu/renderApplicationForm.do;jsessionid=B12147D9AD18FC37587F14121E22F409?serviceId=7210003&UUID=fb7f7b3a-e64a-4ffc-8c52-d2e7a9bfd7e5&grievDefined=0&serviceLinkRequired=No&directService=true&userLoggedIn=N&tempId=2280&source=CTZN&OWASP_CSRFTOKEN=697J-G4WE-WFRB-E255-LRCS-V8PB-7Z9I-R87Z

 நோய் தொற்றின் பயத்தால் சில வாடிக்கையாளர்கள் பால் வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதன் மூலம் மீந்த பாலை மதிப்பு கூட்டி விற்பதன் மூலம் லாபம் அதிகம் பெறலாம், மீதம் உள்ள பாலையும்  நல்ல முறையில் பாதுகாக்கலாம்.

 கொல்லைப்புற கோழி வளர்ப்பு

கோழி வளர்க்கும் விவசாயிகள் தங்களுடைய கோழிகளுக்கு வீட்டிலுள்ள தானியங்கள் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்திய காய்கறிகளைக் கொண்டு கொல்லைப்புற கோழிகளுக்கு தீவனம் அளிக்கலாம். இயல்பாக கொல்லைப்புற கோழி வளர்ப்பில் எந்த ஒரு பாதிப்பும் பெருமளவில் வருவதில்லை ஆனால் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக கோழிகளை பாதுகாத்து வைப்பது முக்கியமாகிறது இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் தெருவிலே சுற்றி திரியும் நாய்களுக்கு உணவு கிடைக்காத பட்சத்தில் கொல்லைப்புற கோழிகளின் மீது படை எடுக்க நேரிடும் அதனால் கோழிகளை பத்திரமாக வளர்ப்பது அவசியமாகிறது தானியங்களை கொடுக்கும் போது அவற்றை முழுமையாக மாற்றிக் கொடுப்பது செரிமானத்திற்கு உதவும் முக்கியமாக அரிசி பயன்படுத்தும் போது அதை ஊற வைத்து கொடுப்பது நல்லது. சோளம் மக்காச்சோளம் கம்பு போன்ற தானியங்களையும் தீவனமாக பயன்படுத்துவது அவசியமாகிறது.

புரதச் சத்து அதிகம் நிறைந்த பாசி தீவனம் அசோலா அகத்தி மற்றும் எந்த வகை கீரைகள் கிடைத்தாலும் அதை கோழிகளுக்கு நாம் அளித்து வரலாம். பப்பாளி பழம் வாழைப்பழம், பப்பாளி  இலை, வாழை இலை ஆகியவற்றை உணவாக அளித்து வரலாம். வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதற்கு வைப்பதும் கோழிகள் வெப்பத்தின் தாக்கத்தால் இறப்பதைத் தவிர்க்கும்.

 பன்றி வளர்ப்பு

கால்நடை வளர்ப்பில் அதிக அளவு பாதிக்கப்பட்ட ஒரு தொழில் என்று பார்த்தால் அது பன்றி வளர்ப்பு. தமிழ்நாட்டில் பெரும்பாலும் பன்றி வளர்ப்பவர்கள், உணவகங்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் இருந்து கிடைக்கும் மீதமுள்ள உணவை வைத்தே பன்றி வளர்த்து வந்தனர். இப்பொழுது ஊரடங்கு காரணமாக அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ள நிலைமையில் பன்றிகளுக்கு போதுமான அளவு தீவனம் கிடைப்பது அரிதாகி உள்ளது. அதனால் பன்றி வளர்க்கும் விவசாயிகளுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட நேரிடும் இந்த தட்டுப்பாடு காரணமாக பன்றிகளின் உற்பத்தி திறன் குறைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற நேரங்களில் பன்றி வளர்க்கும் விவசாயிகள் தங்கள் பண்ணையின் அருகாமையில் உள்ள அனைத்து வீடுகளிலிருந்து மீதம் உள்ள உணவுகளை கொண்டுவந்த பன்றிகளுக்கு கொடுக்கலாம் காய்கறிகளில் உள்ள காய்கறிகளில் இலைகள் தோள்கள் ஆகியவற்றையும் உணவாக கொடுத்து வரலாம்

 ஆடு வளர்ப்பு

ஆடுகள் மற்ற கால்நடைகளைப் போல இல்லை, தினமும் ஓடியாடி மேய்ச்சல் நிலத்தை தேடி தீவனம் உண்பதே அதன் அன்றாட வாழ்க்கையாக இருந்த நிலையில் இப்பொழுது இந்த ஊரடங்கு காரணத்தினால் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது அதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் அவர்கள் வீட்டின் அருகாமையிலேயே ஆடுகளை மேய்க்கலாம் முடிந்த அளவு கல்யாண முருங்கை கொடுக்காப்புளி வேலி மசால் அகத்தி போன்ற புரதச்சத்து நிறைந்த தீவனப்பயிர்களை ஆட்டுக் கொட்டகையின் மூலைகளில் கட்டிவைத்து ஆடுகளை இயல்பாக உண்ண விடலாம்.

அதிக அளவில் ஆடு வளர்ப்போம் ஏழை விவசாயிகள் முளைகட்டுதல் என்ற அடிப்படையில் மக்காச்சோளம், சணப்பை ஆகியவைகளை முளைகட்டி பசுந்தீவனங்களை அழைத்து வரலாம் முடிந்த அளவிற்கு வீட்டின் அருகிலேயே ஆடுகளை மேய்க்க விடலாம். ஆடுகளும் நோய்களால் தாக்கப்படும் என்ற காரணத்தினால் அவருடைய பராமரிப்பு இன்னும் அவசியமாகிறது.

 செல்லப்பிராணிகள் பராமரிப்பு

உற்ற தோழனாக இருக்கும் செல்லப்பிராணிகளை பேணி காப்பது நம் கடமை. ஆனால் இந்த வைரஸ் கிருமியின் தாக்கத்தால் மனசாட்சி இல்லாத சிலர் தங்களது செல்லப்பிராணிகளை வீட்டின் வெளியே அனுப்பி விடுவது மிகுந்த கவலையளிக்கிறது அது போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும்.

 பசித்திருக்கும் பிராணிகளுக்கு உணவளிப்போம்

தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் விவசாயிகளால் கைவிடப்பட்ட மாடுகள் நம்மைச் சுற்றி வாழும் காகம் குருவி மற்றும் இதர பறவைகள் இவை அனைத்தும் இதுவரை நம்மை நம்பியே வாழ்ந்து வருகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த வாயில்லா ஜீவன்களையும் நாம் கைவிடக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். நம் வீட்டின் வெளியில் ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் மற்றும் தானியங்களை வைப்பது இந்த வாயில்லா ஜீவன்களின் பசியை போக்கும். வீட்டில் மீதம் உள்ள உணவுகளை ஆதரவற்ற நாய்களுக்கு கொடுப்பது நல்லது.

 கொரோனவும் கால்நடைகளும்

 கொரோனா நோய் கால்நடைகளுக்கு பரவாது. பால், முட்டை, கறி  ஆகியவற்றின் வாயிலாகவும் பரவாது. சுத்தமான வழிமுறைகளை பின்பற்றினால் பயம் வேண்டாம்.

 நோய் தோற்று பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பொது சுகாதார வழிமுறைகள்

 சுத்தமான கொட்டகை , சுத்தமான மாடுகள் , சுத்தமான கறவையாளர் இவை மூன்றும் சுத்தமான பால் உற்பத்திக்கு அவசியம்.  இந்த கொரோனாவின் தாக்கத்தால் அதிக படியான சுகாதார வழி முறைகள் கடைபிடிக்க வேண்டியுள்ளது.

 பால் கறவைக்கு முன்னரும் பின்னரும் 20 நாழிகைகள் கிருமி நாசினி கொண்டு கைகளை

  • சுத்தம் செய்ய வேண்டும்.
  • பால் கறக்கும் பாத்திரத்திதை சுத்தமாக கழுவி சூரிய ஒளியில் காயவைப்பது அவசியம்.
  • கூட்டுறவு பால் உற்பத்தி சங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தால் , சீக்கிரமாக பாலை
  • கொடுத்துவிட்டு வீடு திரும்புவது அவசியம்..
  • தேவை இல்லாத வெளி ஆட்களை பண்ணையில் அனுமதிக்கக்கூடாது.
  • தேவையில்லாமல் எதையும் தொடுவதை தவிர்க்கவும். மீறி தொட்டுவிட்டால் உடனே
  • கைகளை சுத்தம் செய்யவும்.
  • மாட்டு கொட்டகையை தினமும் சுத்தம் செய்யுதல் அவசியம்.

 மேலே கூறியுள்ள தகவல்களை பின்பற்றி கால்நடைகளை காப்போம்.

 தனித்திருப்போம்!!! கொரோனவை ஒழிப்போம்!!!


Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts