கால்நடை வளர்ப்பில் மரங்களின் பங்கு!!!

 

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால்" குறள் 217  மரத்தின் பெருமையை விளக்கவல்லது. ஒரு நல்ல மரமானது நன்கு வளர்ந்ததும் இலை, காய், பட்டை, வேர், பழம் எனப் பலவகையாலும் மக்களின் பிணிக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. இவ்வகையாக மரங்கள் கால்நடைவளர்ப்பில் கீழ்கண்ட பங்கினை அளிக்கிறது.

 

1.     உயிர் வேலி:

உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும்.

மரங்கள் பண்ணைகளுக்கு  நல்ல  ஒரு உயிர்வேலியாக அமைகிறது. கிளுவை, ஈச்சை,  கொடுக்கா புள்ளி போன்ற மரங்களை வேலிக்காக பயன்படுத்தலாம். இதனால் வெளியாட்கள், விலங்குகள்  பண்ணையின் உள்ளே நுழைய இயலாது.

 

2.     கால்நடைத் தீவனம்:   

மரங்கள் கால்நடைகளுக்கு ஒரு நல்ல துணைத்தீவனமாக அமைகிறது.  அகத்தி, சூபா புல், சவுண்டல், கிளைரிசீடியா, மரக்கிளுவை, மல்பெரி, முருங்கை, கல்யாண முருங்கை  போன்றவை பண்ணைகளில் வளர்க்கப்படும்போது நல்ல சத்தான  (புரதம், நார்ச்சத்து கொண்ட) பசுந்தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

மரங்கள் ஆண்டுப்பயிரானதால் பெருமளவு பசுந்தீவனச்செலவை குறைக்கமுடியும். மரங்களில் வாழும் பூச்சிகள், புழுக்கள் கோழிகளுக்கு நல்ல உணவாகும்.

 

3.     மேச்சலிடம்:

பண்ணையைச்சுற்றி மரங்கள் இருந்தால் கோழி, வாத்து, வான்கோழி, கிண்ணி கோழி, ஆடு போன்றகால்நடைகளுக்கு திறந்த வெளிவளர்ப்பில் உறுதுணையாக இருக்கும். முக்கியமாக பறவைவளர்ப்பில் அவற்றின் உணவு மற்றும் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்திசெய்கிறது.

 

4.     காற்று தடுப்பான்:

சவுக்கு, மூங்கில், வேம்பு, மா போன்ற மரங்கள் நல்ல காற்று தடுப்பானாக செயல்படும். இதனால் பறவைகள் வளர்ப்பு, ஆடுவளர்ப்பில் குளிர்காற்றால் வரும் நோய்த்தாக்கம், பலத்த காற்றினால் பண்ணைகளுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கலாம்.

 

5.     பொருளாதார வைப்புநிதி:

தலைமுறைகளில் பண்ணையாளரின் பொருளாதாரத்தை மேம்படுத்த சந்தனம், செம்மரம், தேக்கு, மகோகனி போன்ற மரங்கள் முக்கிய பங்குஅளிக்கின்றன.

 

6.     நுண் வானிலை மாற்றம்:

அடர்மர வளர்ப்பில் பண்ணையின் தட்பவெப்ப மாற்றத்தை கொண்டுவரலாம். நுண் வானிலை (அ) தட்பவெப்ப மாற்றத்தை உருவாக்குவதால் பண்ணையில் மற்ற பயிர்கள், செடிகள் நாள் முறையில் வளர்ச்சியடையும். கால்நடைகளில் ஏற்படும் வெப்ப அயர்ச்சி, மன அழுத்தம் போன்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.

 

7.     சத்தான பண்ணை உரம்

மரக்கழிவுகளான இலைகள், சருகுகள், பட்டைகள் மற்ற பண்ணை தொழுவுரத்தோடு சேர்க்கும் போது நல்ல சத்தான உரம் பண்ணையில் உற்பத்திசெய்யமுடியும்.

    

8.     மண்வளம் காப்பான்:

பண்ணையில் மண்வளத்தைக்காத்து, மழை வெள்ளத்தின் போது மண்ணரிப்பைத் தடுக்கவல்லது மரங்கள்.

 

9.     பல்லுயிர் பெருக்கம்:

பண்ணையில் பறவைகள், மற்ற ஊர்வன போன்றவற்றின் பெருக்கத்திற்கு மரங்கள் பெரும்பங்களிக்கின்றன. அதனால் எலிகள், உண்ணிகள், பூச்சிகள் கட்டுப்படுத்துதலில் இவைகளின் பங்கு மகத்தானது.

 

10.            அழகியல் மதிப்பு:

மரங்கள் பண்ணையின் அழகியல் மதிப்பைக்  கூட்டுவதால் அமைதியான சுற்றுசூழலை உணரவழிவகைசெய்யும். பானையில் முகப்பு, வழிப்பாதைகளில் பூமரங்கள், அலங்கார மரங்களை வளர்க்கலாம்.

பண்ணையில் எழில்மிகு சோலையை உருவாக்குவதில் மரங்களின் பங்கு அளப்பரியது.

 

மரங்கள் எண்ணிக்கையை கணக்கிடுதல்:

எத்தனை மரங்களை நம் பண்ணையில் வளர்க்கலாம் என்பது அவரவர் சூழலைப்பொருத்தது. மரங்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பது எப்படி என்பது கீழ்கண்ட விதிமுறையை பொறுத்தது.

 

நிலத்தில் மரங்களின் மதிப்பீடு = (நிலத்தில் அளவு) / [(வரிசைக்கு வரிசை இடைவெளி அடி) X (மரத்திற்கு மரம் இடைவெளி அடி)]

ஒரு ஏக்கரில்  மரங்களின் மதிப்பீடு = 43,560 / (8  X 8) = 680

மரங்களை தேர்வுசெய்தல்:

மரங்களின் தேர்வு நிலத்தின் அமைப்பு, மண்ணின் தன்மை, நீர்  ஆதாரத்தின் நிலை பொறுத்து அமையும். உள்ளூரில் வளரும் மரங்களை பயிரிடலாம், அல்லது வனத்துறை, வேளாண்துறைகளை அணுகி அவர்களின் ஆலோசனையின் பேரில் மரவகையைத் தேர்வு செய்யலாம்.

குறிப்பு:

கொட்டகை அருகே பலம் குறைந்த மரவகைகளை வளர்ப்பதை தவிர்க்கவும், அவை பலத்தகாற்றில் முறிந்து விழும் அபாயம் இருப்பதால் நல்ல வலுவான மரங்களை (புங்கு, வேம்பு போன்ற) அருகில் வளர்க்கலாம்.

வேகமாக வளரும் தன்மையுடைய மரங்கள், பலம் குறைந்த தண்டுகளைக் கொண்டுள்ளது.  

நன்றி





தகவல்


கார்க்கி. ஆ
 B.E, M.A

Share:

No comments:

Post a Comment

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts